தொழில் தொடங்க ஏற்ற நாடுகளின் பட்டியல்: இந்தியா அபார முன்னேற்றம்
உலகில் உள்ள நாடுகளில் எளிதாக தொழில் தொடங்க ஏற்ற நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் இந்தியா நல்ல முன்னேற்றத்தை பெற்றுள்ளது.
இந்த பட்டியலுக்காக மொத்தம் 190 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இந்த பட்டியலில் இந்தியா 100-வது இடத்தில் தற்போது உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 30 இடங்கள் முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தையும், சிங்கப்பூர் இரண்டாவது இடத்தையும் டென்மார்க் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் 147-வது இடத்தையும், சோமாலியா கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த பட்டியல் குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் அனைத்து பிரிவுகளிலும் கொண்டு வந்த கொள்கை அளவிலான மாற்றத்திற்கு கிடைத்த வெற்றி இதுவாகும். எளிதாக தொழில் தொடங்கும் சூழல், நடுத்தர மற்றும் சிறிய குறுரகத் தொழில்கள் செழித்தோங்க உதவும் என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், முதல் 50 இடத்துக்குள் இடம் பிடிப்பது பிரதமர் மோடியின் கனவு. நாம் இப்போது 100-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறோம். விரைவில் 50-ம் இடத்துக்குள் இடம்பிடித்து விடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.