இது தவறு அல்ல, குற்றம்: விஷால் வேதனை

இது தவறு அல்ல, குற்றம்: விஷால் வேதனை

கொடுங்கையூரில் இரண்டு சிறுமிகள் மின் வயர்களை மிதித்ததால் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்த நிலையில் இதுகுறித்து நடிகர் விஷால் ஆவேசமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஒவ்வொரு முறையும், இயற்கைப் பேரிடர் சமயங்களில் – அது பெருமழையோ, புயலோ, வெள்ளமோ.. – இப்படி ஒரே காரணத்திற்காக நிகழும் மரணங்களைப் பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது.

விவசாயிகள் இறக்கிறார்கள், அப்பாவி பொதுஜனம் மழைக் காலங்களில் மின்சாரம் தாக்கி இறக்கிறார்கள்.ஒரே நிலையை நாம் எத்தனை காலம் எதிர்கொள்ளப் போகிறோம்? நம் தவறுகளைத் திருத்திக் கொண்டு, மீண்டும் அவை நிகழாமல் தடுக்க வேண்டாமா?

நாம் என்ன சொல்ல நினைக்கிறோம்? நமது நகரம் இன்னும் சீராகவில்லை, இந்த கஷ்டங்களை எதிர்கொண்டு, இதுபோன்ற காலங்களில் நிகழும் மரணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றா? இது சோகமயமானது, வேண்டாதது.. இதுபோல் இதுவரை பலமுறை நடந்துள்ளது.

இவற்றை நாம் போர்க்கால அடிப்படையில் அணுகாததால், நாம் சென்னையை இது போன்ற பெருமழை, புயல்,வெள்ளத்தை எதிர்கொள்ளும் நிலையில் வைத்திருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

இவர்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ள வைக்க, நாம் இன்னும் எத்தனை உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டும்?

இது குற்றம். தவறு அல்ல.. குற்றம்” என்று விஷால் கூறியுள்ளார்.

 

Leave a Reply