கவர்னர் ஆய்வு, அமைச்சர்கள் வெட்கப்பட வேண்டும்: தினகரன்
நேற்று கோவையில் கவர்னர் பன்வாரிலால் அதிகாரிகளிடம் செய்த ஆய்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழக அமைச்சர்கள் ஆய்வுகள் வரவேற்கப்பட வேண்டியது என்று கூறிவருகின்றனர். இந்த நிலையில் கவர்னரின் ஆய்வு குறித்து டிடிவி தினகரன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
தமிழக ஆளுனரின் ஆய்வு மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது. மக்கள் விரோத பழனிச்சாமி அரசு வீட்டுக்குப் போக வேண்டும் என்பது தமிழக மக்களின் ஒட்டுமொத்த விருப்பம். அதற்கான முன்னோட்டமாகத்தான் இதைப் பார்க்க வேண்டி இருக்கிறது.
புதுச்சேரி மற்றும் டெல்லியில் துணைநிலை ஆளுனர்களின் தலையீட்டால் எப்படி நிர்வாகம் ஸ்தம்பித்திருக்கிறதோ அதே நிலை தமிழகத்திற்கும் வரலாம். அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அரசு அதிகாரத்தில் ஊடுறுவும் பி.ஜே.பி.யின் பாணி இது போலும்!
முதல்வர் பழனிச்சாமியின் அரசு, தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, மாநிலத்தின் நலன்களை அடகு வைக்க துளியும் தயங்காது என்பதையே ஆளுனரின் ஆய்வு உணர்த்துகிறது. நீட் தேர்வு முதல், தொடர்ந்து தமிழகத்தின் நலன்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன
இதுபோன்ற ஆய்வுகள் வரவேற்கப்பட வேண்டியது என்று அமைச்சர்கள் சொல்வது வெட்கக்கேடானது. இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய முதல்வர் பழனிச்சாமி தனது சுயநலத்தில் மட்டுமே கவனமாக இருக்கிறார்!