திவால் சட்டத் திருத்தம் வங்கிகளுக்கு பாதகமா?
”முடி வெட்டிக்கொள்வதில் பிரச்சினை இல்லை, ஆனால் மொட்டையாகாமல் இருந்தால் சரி,’’ என்று எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்த கருத்துதான் இப்போது தொழில் துறை வட்டாரத்தில் பரபரப்பான விவாதம். ஏதாவது ஒரு வகையில் வாராக்கடனை வசூலித்துவிட வேண்டும் என்பதை இவரது பேச்சில் இருந்து புரிந்துகொள்ள முடியும்.
மோடி அரசு தன்னுடைய சாதனைகள் என பல விஷயங்களைக் கூறினாலும், வேலை வாய்ப்பின்மை மற்றும் வாராக்கடன் உள்ளிட்ட சில விஷயங்கள் தொண்டையில் சிக்கிகொண்ட முள்ளாக உறுத்திக்கொண்டே இருக்கின்றன. தற்போது வாராக்கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவசர சட்டம் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கை ஒன்றை மத்திய அரசு எடுத்திருக்கிறது.
பொதுத்துறை வங்கிகள் வாராக்கடனை முழுமையாக அறிவித்து அதற்குத் தேவையான தொகையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என 2015-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. அப்போது முதல் வாராக்கடன் பூதம் வெளிவரத் தொடங்கியது. 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ.2.94 லட்சம் கோடியாக இருந்தது. அதில் இருந்து தற்போது வரை 2017-ம் ஆண்டு செப்டம்பர் காலாண்டு வரை ரூ.8.38 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. மொத்த வாராக்கடனில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு 87.6 சதவீதமாக இருக்கிறது.
உலக வங்கி வெளியிட்ட தொழில்புரிவதற்கான சாதகமான உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 30 இடங்கள் முன்னேறி 100-வது இடத்தைப் பிடித்தது. இதற்கு முக்கியமான காரணம் திவால் சட்டம். திவால் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த சட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஒரு திருத்தத்தை கொண்டுவந்தது. அந்த திருத்தத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். தற்போதைய கார்ப்பரேட் விவாதங்களில் முக்கியமானதாக திவால் சட்ட திருத்தம் இடம் பிடித்திருக்கிறது.
அவசர சட்டம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, திவால் நடைமுறை எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பார்ப்போம். ஒரு நிறுவனம் கடனை செலுத்தவில்லை என்றாலோ அல்லது வாடிக்கையாளர்களுக்கு நிலுவை தொகையை கொடுக்கவில்லை என்றாலோ, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை (என்சிஎல்டி) அணுகலாம். இந்த வழக்கினை ஏற்றுக்கொள்ள அல்ல நிராகரிக்க என்சிஎல்டி 14 நாட்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளும். ஒரு வேளை ஏற்றுக்கொண்டுவிட்டால் 180 நாட்களுக்குள் தீர்வுக்கான திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு 90 நாட்கள் மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படலாம். ஒருவேளை தீர்வுக்கான திட்டம் தயாரிக்க முடியவில்லை என்றால் சொத்துகளை விற்பதற்கான நடைமுறை தொடங்கும். இதுவரை என்சிஎல்டி-யில் 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. தற்போதைய நடைமுறையில் ஒரு சொத்து அடமானம் வைக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட சொத்தின் வாரிசுதாரர்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. ஏலம் விடப்பட்டு கிடைக்கும் தொகை சம்பந்தப்பட்ட நபருக்கு/நிறுவனத்துக்கு வழங்கப்படும்.
ஏற்கெனவே உள்ள நடைமுறைபடி சம்பந்தப்பட்ட சொத்துகளை ஏலம் விடும் போது யார் வேண்டுமானாலும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம். நிறுவனத்தின் சொத்து ஏலம் விடும் போது சம்பந்தபட்ட நிறுவனத்தின் நிறுவனர்கள் கூட ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என்னும் விதிமுறை இருந்தது. தற்போது ஏலத்தில் யார் கலந்து கொள்ளலாம் என்பதற்கு வரைமுறைகளை உருவாக்கி இருக்கிறது.
யார் கலந்து கொள்ளக் கூடாது?
வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஓர் ஆண்டுக்கும் மேலான நிறுவனங்களின் நிறுவனர்கள் தங்களது சொந்த நிறுவன சொத்தின் மீதான ஏலத்தில் கலந்து கொள்ள முடியாது. அதேபோல கடனை திருப்பி செலுத்தும் தகுதி இருந்தும் திருப்பி செலுத்தாத நிறுவனர்கள், இரு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கபட்ட நிறுவனர்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்கள், பங்குச்சந்தையில் நிதி திரட்ட தடைவிதிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளிட்டவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள முடியாது என விதிமுறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் இருக்கின்றன.
ஏன் தடை விதிக்கப்பட்டது?
வங்கியில் கடன் வாங்கும் போது சொத்தினை அடமானம் வைத்துதான் கடன் வாங்குவார்கள். வாங்கிய கடனுக்கும் அவர்களின் தனிப்பட்ட சொத்துகளுக்கும் சம்பந்தம் இல்லை. அடமானம் வைத்திருக்கும் சொத்தை ஏலம் விடுவதால் உண்மையான மதிப்பை விட குறைவாக ஏலம் கேட்பார்கள். அல்லது உண்மையான மதிப்பு மற்றவர்களுக்கு தெரியாது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனர்களே தங்களது சொத்துகளின் மீதான ஏலத்தில் கலந்து கொள்ளும் பட்சத்தில், குறைவான விலையில் தங்கள் சொத்தை மீண்டும் ஏலத்தில் எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்து என்பதால் கடனையும் திருப்பி செலுத்தாமல் அவர்களின் சொத்தும் மீண்டும் அவர்களுக்கே கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
என்ன பிரச்சினை?
இந்த விதியை பார்க்கும் போது சிறப்பாக இருப்பதாக தோன்றினாலும் நடைமுறையில் வங்கிகளுக்கே இது பெரும் பாதிப்பாக இருக்கப்போகிறது என கோடக் செக்யூரிட்டீஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிறுவனர்களே போட்டியிடவில்லை என்றால், ஏலம் கேட்கும் நபர்களின் எண்ணிக்கை குறையும். போட்டி குறைவாக இருப்பதால் ஏலம் கேட்கும் தொகையும் குறைவாக இருக்கும். இதனால் வங்கிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்னும் கருத்து இருக்கிறது.
தற்போது ஸ்டீலுக்கு தேவை இருப்பதால் இந்த துறை சொத்துகளை ஏலம் கேட்க நிறுவனங்கள் முன்வருவார்கள். உதாரணத்துக்கு டாடா ஸ்டீல் மற்றும் மிட்டல் ஆகிய நிறுவனங்கள் சிக்கலில் இருக்கும் ஸ்டீல் நிறுவனங்களின் சொத்துகளை வாங்குவது குறித்த பரிசீலனையில் உள்ளன. ஆனால் மின்சாரம் உள்ளிட்ட வாராக்கடன் அதிகம் உள்ள இதர துறைகளின் சொத்துகளை ஏலம் கேட்க ஆள் இல்லாத சூழ்நிலை கூட உருவாகும். மொத்தமாக பார்த்தால் வங்கிகளுக்கு பாதிப்பு எற்படும் என பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
நிறுவனங்களின் நிலை என்ன?
மத்திய அரசின் அவசர சட்டத்தால் சில முக்கியமான நிறுவனங்கள் ஏலத்தில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் உயரதிகாரிகள் நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிகிறது. கடனை திருப்பி செலுத்தும் வாய்ப்பு இருந்தும் செலுத்தாத நிறுவனங்களின் பட்டியலில் நாங்கள் இல்லை. எங்கள் தொழிலின் சூழல் சரியில்லாததால்தான் நாங்கள் கடனை செலுத்தவில்லை. அதனால் ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தால் பங்கேற்போம் என பூஷண் ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நிதின் ஜோஹ்ரி தெரிவித்திருக்கிறார்.
கடனை திருப்பி செலுத்தாமல் வங்கித் துறைக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய நிறுவனங்கள், தங்களது சொத்துகளை குறைவான தொகையில் ஏலம் எடுத்துவிடக் கூடாது எனும் எண்ணம் சரிதான். ஆனால் வங்கிகளின் நிலைமை. சொத்துகளை ஏலம் கேட்க யாரும் வரவில்லை என்றாலோ அல்லது குறைவான தொகைக்கு ஏலம் கேட்டாலோ வங்கிகளின் சுமை மேலும் அதிகரிக்கும்.
அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தாலும் அடுத்த மாதம் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த அவசர சட்டம் நிறைவேற வேண்டும். ஏற்கெனவே சிக்கலில் இருக்கும் வங்கிகளுக்கு, இந்த அவசர சட்டம் உதவியாக இருக்குமா என்பது போக போகத் தெரியும்!