அரிப்பு எதனால் ஏற்படுகிறது
வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருட்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்து விடும்.
ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயனப் பொருட்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்குத் தங்க நகைகள், கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, ‘நிக்கல்’ வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு ‘கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்’ என்று பெயர்.
அப்படி ஆகும்போது தோல் தடிப்பதுடன், சொரசொரப்பாகி கறுப்பாகிறது. இந்த இடங்களைச் சொரியச் சொரிய நீர்க்கொப்பளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்கு ‘கரப்பான் நோய்’ (Eczema) என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழுவதும் அரிப்பை ஏற்படுத்தும்.
சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புற ஊதாக்கதிர்கள் ஒவ்வாமையாகி அரிப்பு வரும். கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்று பட்டு, தோல் வறட்சி ஏற்பட்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் முதன்மையானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்துத் தடிப்புகள் உண்டாகும்.
அடுத்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி எனப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு, தொல்லை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்துகொண்டால், ‘தோல் மடிப்பு நோய்’ (Intertrigo) தோன்றும். இதுவும் அரிப்பை அதிகப்படுத்தக் கூடிய ஒரு நோய்தான். இவை தவிர தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத்தும். எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்துபோவது போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.
உடலுக்குள் இருக்கும் எதிரிகள்
இனி, உடலுக்குள் இருக்கிற எதிராளிகளைப் பார்ப்போம். பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றில் ஏதோ ஒன்று ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். உணவைப் போலவே வேறு நோய்களுக்காகச் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
அரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. ‘ஹிஸ்டீரியா’ என்ற மனநோய் உள்ளவர்கள் தங்கள் உடலில் எந்நேரமும் ஒரு பூச்சி ஊறுவதுபோல் கற்பனை செய்துகொள்வார்கள். இதனால் உடலைச் சொறிந்துகொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு மனநோய் குணமானால்தான் அரிப்பும் சரியாகும்.
அரிப்புக்குக் காரணம் தெரிந்து, அதைக் களைந்தால் மட்டுமே அரிப்பிலிருந்து விடுதலை கிடைக்கும். சில வகை அரிப்புகள் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டும் தொல்லை கொடுத்துவிட்டு, அந்த சீசன் முடிந்ததும் தானாகவே விடைபெற்றுவிடும்.