வீடுகளுக்கு புதிய வீடியோ அழைப்பு மணி
சாதாரண வீடுகள் எல்லாம் இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியால் ஸ்மார்ட் வீடுகளாக மாறி வருகின்றன. இந்த ஸ்மார்ட் தொழில்நுட்பம் வீடுகளில் நம் அன்றாடம் உபயோகிக்கும் சாதனங்களுக்குச் செயற்கை நுண்ணறிவை வழங்குகிறது. விளக்குகள், வெப்பநிலைச் சீராக்கிகள், பூட்டுகள், பாதுகாப்பு கேமராக்கள் ஆகியவை எல்லாம் ஸ்மார்ட் சாதனங்களாக மாறிவிட்டன. அந்த வரிசையில் அழைப்பு மணியும் இப்போது அறிவைக் கொண்ட ஸ்மார்ட் சாதனமாகிவிட்டது.
2012-ம் ஆண்டு ஜேம்ஸ் சைமன் என்னும் தொழிலதிபர் அமெரிக்காவில் முதன்முதலாக இந்த வகை அழைப்பு மணியைச் சந்தையில் ரிங் வீடியோ பெல் என்ற பெயரில் அறிமுகப்படுத்தினார். சாதாரண அழைப்பு மணி நிறுவப்பட்ட வீடுகளில் அழைப்பு மணியை அழுத்தியது யார் என்பதைப் பார்ப்பதற்கு நாம் கதவின் அருகே வந்தே ஆக வேண்டும். ஆனால், இந்த வீடியோ அழைப்பு மணி அவர்களை நம் படுக்கை அறையிலிருந்தோ சமையல் அறையிலிருந்தோ பார்க்கும் வசதியை நமக்கு அளிக்கிறது. இதன் மூலம் நாம் வீட்டின் எந்த மூலையிலிருந்தும் அவர்களுடன் உரையாடவும் முடியும்.
வீடியோ அழைப்பு மணி என்றால் என்ன?
அழைப்பு மணியும் பாதுகாப்பு கேமராவும் இண்டர்காமும் இணைந்த கையடக்க அளவிலான அமைப்பு என்று இதைச் சொல்லாம். வயர் வீடியோ அழைப்பு மணி, வயர்லெஸ் வீடியோ அழைப்பு மணி, ஸ்மார்ட் வீடியோ அழைப்பு மணி என்று இதில் மூன்று வகை உள்ளன. இப்போது ஸ்மார்ட் வீடியோ அழைப்பு மணி பரவலாகச் சந்தையில் கிடைக்கிறது.
இதில் கேமராவுடன் இணைந்து ஒரு மைக்கும் ஸ்பீக்கரும் உண்டு. இது ஒரு ஸ்மார்ட் வீட்டு உபயோகச் சாதனம் என்பதால் இதற்கென்று தனியே ஒரு செயலி உண்டு. இந்தச் செயலியை நாம் நமது கைபேசியில் நிறுவிக்கொள்ள வேண்டும். இதன் பொத்தானை அமுக்கியவுடன் சாதாரண அழைப்பு மணியைப் போன்று சத்தம் எழுப்பும்.
அதே நேரம் நம் கைபேசியிலும் அதன் செயலி விழித்துக்கொண்டு நம்மை உஷார்படுத்தும். அந்தச் செயலியைத் திறந்தவுடன் வெளியில் நிற்பவரின் உருவம் நம் கைபேசியில் தெரியும். வழக்கமான கைபேசியில் பேசுவது போன்று நாம் அவர்களிடம் உரையாடவும் முடியும். தெரிந்தவர் என்றால் வருகிறேன் சற்றுக் காத்திருங்கள் என்று சொல்லலாம். தெரியாதவர் என்றால் அவரைப் பற்றிய தகவலைக் கேட்டு அறிந்து முடிவுசெய்யலாம்.
எப்படி வேலை செய்கின்றன?
இது ஒரு ஸ்மார்ட் சாதனம் என்பதால் புளுடூத் இணைப்போ வயர்லெஸ் இணைப்போ இதற்கு அவசியம். இதன் செயலியைக் கொண்டு நேரடியாகக் கைபேசியுடனும் இணைக்கலாம்; ஸ்மார்ட் ஹப்புடனும் இணைக்கலாம். புளுடூத் இணைப்பு என்றால் அதன் செயல்திறன் 40 மீட்டருக்குள் சுருங்கும். வயர்லெஸ் இணைப்பு என்றால் அதை எங்கிருந்தும் இயக்கலாம். இதன் கேமரா 180 டிகிரி பார்க்கும் திறன் கொண்டது. இந்த கேமராவால் பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் பார்க்க முடியும். ஸ்மார்ட் ஹப்புடன் இணைத்தால் நம்மால் IFTTT வசதியை உபயோகப்படுத்த முடியும். உதாரணத்துக்கு நமது நண்பரோ உறவினரோ பொத்தானை அமுக்கி இருந்தால் நாம் இந்த IFTTT வசதியின் மூலம் கதவில் உள்ள ஸ்மார்ட் பூட்டைத் திறக்கும்படி செய்யலாம்.
இதை எவ்வாறு நிறுவுவது?
இந்த ஸ்மார்ட் சாதனம் DIY (Do it yourself) வகையைச் சார்ந்தது. இதை நிறுவுவதற்கு எந்தத் தொழில்நுட்ப வல்லுநரும் தேவையில்லை. கதவிலோ சுவரிலோ இரண்டு துளைகள் போட துளையிடும் கருவி மட்டும் போதும். பழைய அழைப்பு மணி பொருத்திய இடத்தில் பொருத்தினால் அந்த வேலையும் மிச்சமாகும். பிறகு, அதன் செயலியைக் கைபேசியில் தரவிறக்கம் செய்ய வேண்டும். இந்தச் செயலியை நிறுவுவது மிகவும் எளிதானது. ஏனென்றால், அது தன்னைத்தானே நிறுவிக்கொள்ளும் திறன் கொண்டது. நம் வீட்டில் ஸ்மார்ட் ஹப் இருந்தால் அதனுடனும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி எளிதாக இணைத்துக் கொள்ளலாம். வயர்லெஸ் இணைப்பு இதற்கு முக்கியம் என்பதால் அதன் சிக்னல் அளவை உறுதிசெய்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
இதன் சிறப்பம்சங்கள்
கதவின் வெளியே நிற்பவர் யார் என்பதை நாம் உலகின் எந்த மூலையில் இருந்தும் அறிந்து அவர்களுடன் பேசும் வசதியை நமக்கு இது அளிக்கிறது. பணியாள் எத்தனை மணிக்கு வேலைக்கு வருகிறார் எத்தனை மணிக்கு வெளியே செல்கிறார் என்பதை நாம் கண்காணிக்க முடியும். பள்ளியிலிருந்து நம் குழந்தைகள் பத்திரமாக வீடு திரும்பிவிட்டதையும் நாம் உறுதிசெய்துகொள்ள முடியும். வீட்டில் யாரும் இல்லாதபோது நமக்கு ஏதும் கடிதமோ பார்சலோ வந்தால் அதில் உள்ள IFTTT வசதி மூலம் வெளிக் கதவை மட்டும் திறந்து அவற்றை உள்ளே வைத்துவிட்டு அவர்களைப் போகச் செய்ய முடியும். மேலும், இதில் பேசுவதைப் பதிவுசெய்யும் வசதியும் இருப்பதால், விருந்தாளிகள் தங்கள் தகவலை அதில் பதிவுசெய்துவிட்டுச் செல்ல முடியும்.
இதன் விலை
இந்த வகை அழைப்பு மணிகள் பத்தாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. தயாரிக்கும் நிறுவனங்களின் மதிப்பு, கேமராவின் தரம், பதிவுசெய்யும் திறன் ஆகியன அடிப்படையில் இதன் விலை மாறுபடுகிறது. ரிங் வீடியோ பெல், ஆகஸ்ட் ஹோம், டோர் பேர்ட், கோ கன்ட்ரோல், ஹீத் செனித், ஸ்கைபெல் டெக்னாலஜி, விவிண்ட், சுமொடொ போன்ற நிறுனங்களின் வீடியோ அழைப்பு மணிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
நவீன வரவேற்பாளர்
வீடுகளின் கதவுகளை மூடிவைப்பது முறையற்ற செயல் என்று நினைத்த காலம் ஒன்று இருந்தது. குடும்ப அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், நகரமயமாக்கலால் ஏற்பட்ட அந்நியத்தன்மை, பாதுகாப்புப் பிரச்சினைகள் போன்று பல காரணங்களால் தாழிடப்படாத கதவுகள் என்பது இன்றைக்கு நம் கனவில் கூடச் சாத்தியமில்லாததாகி விட்டது. ஆனால், கதவைத் திறக்காமலே பார்த்துப் பேசும் வசதியை நமக்கும் விருந்தாளிக்கும் வழங்கி இந்த வீடியோ அழைப்பு மணிகள் அந்தக் கதவுகளைத் தகர்த்துவிட்டன. இந்த வீடியோ அழைப்பு மணி தொழில்நுட்பம் நம் வீடுகளுக்கு அளித்த நவீன வரவேற்பாளர் எனலாம்.