கூகுள் பயன்படுத்துவோர்களுக்கு இந்த நோய் உறுதியாம்!
சர்வதேச அளவில் ‘டிமென்சியா’ எனப்படும் மறதி நோயால் 4 கோடியே 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வருகிற 2050-ம் ஆண்டில் இந்நோயினால் 13 கோடியே 10 லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
மறதி நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தியும் அதற்கு சிகிச்சை முறை கண்டறியப்படவில்லை. இது குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் இங்கிலாந்தை சேர்ந்த செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக நிபுணர் பிராங்கன் மூரே ஈடுபட்டார்.
மூளை ஆரோக்கியம் இன்றியமையாதது. மூளைக்கு வேலை கொடுத்தால் தான் அது ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அதற்கு நாம் வேலை கொடுப்பதில்லை.
நமது மூளை செய்ய வேண்டிய வேலைகளை கூகுள் போன்ற தேடல் இணைய தளத்தை கொண்டே செய்து விடுகிறோம். மறந்து போன தகவல்களை மூளையை பயன்படுத்தி சிந்தித்து நினைவாற்றலை தேடிப்பார்க்காமல் சட்டென்று இணைய தளத்துக்கு சென்று எளிதில் பெற்று விடுகிறோம்.
இதனால் மூளையின் நினைவாற்றலை தூண்டும் ‘கிரேசெல்’கள் எனப்படும் சாம்பல் நிற செல்கள் அழிந்து மறதி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளார்.