ஓபிஎஸ்-ஐ கைது செய்து விசாரிக்க வேண்டும்: தங்க தமிழ்ச்செல்வன்
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே முதல்வராக ஆசைப்பட்டவர் டிடிவி தினகரன் என்று குற்றஞ்சாட்டிய ஓ.பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
உதகையில் நேற்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் மீது காரசாரமான குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். மேலும் துரோகம் செய்ததால் தான் டிடிவி தினகரனை ஜெயலலிதா 2008 ஆம் ஆண்டே ஒதுக்கி வைத்தார் என்றும் ஓபிஎஸ் கூறினார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது 2008ஆம் ஆண்டிலேயே முதல்வராக டிடிவி தினகரன் சதித்திட்டம் தீட்டினார் என்றும் ஓபிஎஸ் கூறினார். இதனையெல்லாம் அறிந்ததாலேயே ஜெயலலிதா அவரை பெரியகுளம் தொகுதிக்குள்ளும் நாடாளுமன்றத்துக்குள்ளும் நுழையக்கூடாது என்றார் எனவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன் கருத்து கூறியதாவது: அதிமுகவினர் ஆர்கே நகரில் படுதோல்வியை சந்தித்துள்ளனர். அந்த தோல்வியை முதலில் அவர்கள் ஒப்புக்கொள்ளட்டும். காளை மாடு கூட கன்று போடும் ஆனால் தினகரன் கட்சியை கைப்பற்ற முடியாது என ஓபிஎஸ் கூறியிருப்பது சின்னபிள்ளைதனமானது.
2008 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியிலேயே இல்லை. அப்படியிருக்க டிடிவி தினகரன் எப்படி சதித்திட்டம் தீட்டியிருக்க முடியும். தினகரன் ஓபிஎஸிடம் தனது சதித்திட்டம் குறித்து கூறினாரா? அப்படியானால் துணை முதல்வர் ஓபிஎஸை கைது செய்து, எதற்காக இந்த பேச்சுவந்தது என்பது குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டும்’ இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.