7 அதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளாதது ஏன்? ஜெயகுமார் விளக்கம்

7 அதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளாதது ஏன்? ஜெயகுமார் விளக்கம்

சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் 7 எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்ளாதது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டசபைக் கூட்டம் வரும் 8ஆம் தேதி கூடுகிறது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதன் முறையாக அன்று உரை நிகழ்த்த உள்ளார். இதற்கு முன்னதாக இந்தக் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இன்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் முதன் முறையாக சட்டசபைக்குள் நுழைகிறார்.

கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்பட அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 7 எம்.எல்.ஏ.,க்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘’இந்த ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் தினகரனின் எண்ணம் பலிக்காது. இந்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. தினகரனோ, ஸ்டாலினோ ஆட்சியை கவிழ்க்க நினைத்தாலும் முடியாது. அதற்கான முகாந்திரம் இல்லை. செல்லூர் ராஜூ, பிரபு, பவுன்ராஜ் ஆகியோர் சபரி மலை சென்றுள்ளனர். கடம்பூர் ராஜ், பாஸ்கரன் இருவரும் சிவகங்கையில் நடக்கும் வேலு நாச்சியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளனர். சிவசுப்ரமணி மற்றும் ஆறுக்குட்டி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் 104 எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்’’ என்றார்.

Leave a Reply