போக்குவரத்து ஊழியர்களின் அடுத்தகட்ட போராட்டம்: எப்போது முடிவுக்கு வரும்?
தமிழகத்தில் கடந்த ஏழு நாட்களாக போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பள்ளி, அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். நீதிமன்றமும், அரசும் எச்சரிக்கை விடுத்தும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிடவில்லை
இந்த நிலையில் நேற்று சென்னை பல்லவன் சாலை பணிமனை அருகே போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் இன்று போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மத்திய தொழிற்சங்கத்தை சேர்ந்த 6 தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதிக்கவுள்ளன. இன்று காலை 11 மணிக்கு அவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளனர். இன்னும் ஒருசில சங்கங்களும் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக களமிறங்க ஆலோசனை செய்து வருவதால் இந்த பிரச்சனை எப்போது முடிவுக்கு வரும் என்று அப்பாவி பொதுமக்கள் கவலையுடன் கவனித்து வருகின்றனர்.