பத்மாவத் படத்தின் தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்: படக்குழுவினர் நிம்மதி
தீபிகா படுகோனே நடித்த பத்மாவத் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதமே வெளியாகியிருக்க வேண்டிய நிலையில் இந்த படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. மேலும் இந்த படத்திற்கு குஜராத் உள்பட நான்கு மாநிலங்கள் தடை விதித்ததால் சிக்கல் நீடித்தது.
இந்த நிலையில் பத்மாவத் திரைப்படத்துக்கு 4 மாநிலங்கள் விதித்த தடையை இன்று சுப்ரீம் கோர்ட் நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் நிலவிய சிக்கல் தீர்ந்துள்ளது.
இந்தப் படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி கர்னி சேனா அமைப்பு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல்வேறு சிக்கல்களைக் கடந்து இப்படம் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்திற்கு திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி அளித்துவிட்ட போதிலும், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியாணா ஆகிய 4 மாநில அரசுகள் படத்தைத் திரையிட தடை விதித்தன. இந்த நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) மனுத்தாக்கல் செய்யப்பட்டது. திரைப்படம் 25-ம் தேதி வெளியாக உள்ளதால், இதனை அவசர வழக்காக விசாரித்து, மாநில அரசுகள் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்கள் பத்மாவத் திரைப்படத்துக்கு விதித்த தடை உத்தரவுகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், “மாநில அரசுகள் படைப்பாற்றல் உரிமையை துண்டிக்கும் வகையில் தடை விதித்துள்ளது வருத்தமளிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் ஆன்மா அதிர்ந்துபோனது” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறும்போது, “ஒரு திரைப்படம் பாக்ஸ் ஆபீஸை அதிரவைக்கும் அளவுக்கு வசூலிக்கலாம் அல்லது ஒரு படத்தை பார்க்கவே வேண்டாம் என மக்கள் முடியும் செய்யலாம். ஆனால், எந்த ஒரு மாநில அரசும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படக்கூடும் என்பதைக் காரணமாகக் கூறி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி படத்துக்கு தடை விதிக்க முடியாது” என்றார்.