ஹிலாரி கிளிண்டனுக்கு எதிரான பொய் பிரசாரம் செய்ததா ரஷ்யா?
அமெரிக்க பாராளுமன்றம் மற்றும் அதிபர் பதவிக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்க பாராளுமன்ற புலனாய்வு கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையில் விரிவான விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக அமெரிக்க பாராளுமன்ற புலனாய்வு கமிட்டி கடந்த ஆண்டில் அறிவித்தது.
இந்த விசாரணையின்போது அமெரிக்கர்கள் என்ற போலி அடையாளத்தை ஏற்படுத்திகொண்டு சிலர் இணைதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிரான பொய் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பிரசார இயக்கத் தலைவரும், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான கோரே ஆர். லேவென்டோஸ்க்கி உள்பட 4 அமெரிக்கர்கள் மீது தேர்தலை சீர்குலைக்க முயன்றதாக முல்லர் தலைமையிலான விசாரணை ஆணையம் குற்றச்சாட்டுகளை முன்னர் பதிவு செய்திருந்தது.
ஆனால் அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டதாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டியுள்ளதை ரஷிய அரசு இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுதொடர்பாக, ரஷிய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இன்று கூறியதாவது:-
அமெரிக்க தேர்தல்களில் தலையீடு செய்ததாக ரஷிய அரசின்மீது குற்றம்சாட்டி வந்த அமெரிக்க அரசு ரஷியாவை சேர்ந்த தனிநபர்களின்மீது தற்போது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளதை வைத்தே அவர்களிடம் எங்களுக்கு எதிரான அடிப்படை ஆதாரங்கள் ஏதுமில்லை என்பது தெளிவாகிறது.
இதில் ரஷிய அரசின் தலையீடு ஏதுமில்லை, இருக்கவும் முடியாது. பிறநாடுகளின் விவகாரத்தில் ரஷியா தலையிட்டதில்லை. தலயிடுவதும் இல்லை. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது மட்டுமல்ல, நியாயமற்றதும்கூட.