கடைசி டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி: சொந்த மண்ணில் சோகமான தென்னாப்பிரிக்கா
கடந்த சில மாதங்களாக இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வந்த நிலையில் நேற்று நடைபெற்ற 3வது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும், தவான் 47 ரன்களும் சுரேஷ் ரெய்னா 43 ரன்களும் அடித்ததால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டு இழப்பிற்கு 172 ரன்கள் அடித்தது
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி நிதானமாக விளையாடியது. கடைசி இரண்டு ஓவர்களில் 35 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 19வது ஓவரில் 16 ரன்களும், 20வது ஓவரில் 11 ரன்களும் மட்டுமே எடுத்தது. இறுதியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகனாகவும், புவனேஷ்குமார் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.