மின்சாரம் தாக்கினால் உடனே என்ன செய்ய வேண்டும்?
வீட்டின் எல்லா பகுதிகளிலும் மின்சாரத்தில் இயங்கும் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய அத்தியாவசிய தேவையில் நாம் இருக்கிறோம். கையில் ஏதேனும் ஈரம் இருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை, சில சமயங்களில் நம்முடைய விரல்களில் உள்ள மின் காந்த சக்தியின் காரணமாக, எதிர்பாராமல் கரண்ட் ஷாக் அடிப்பதுண்டு.
அதுபோன்ற சமயங்களில் நாம் கொஞ்சம் கவனமாக இருந்தால் அதை தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும். ஆனால் குளியல் அறை மற்றும் சமையல் அறை போன்ற ஈரத்தன்மை அதிகமாக இருக்கும் அறைகளில் மின்சாரம் தாக்கினால் அது உயிருக்கு ஆபத்தாகும். ஏனெனில் ஈரத்தில் மின்சாரத்தின் திறன் மிக அதிகமாக இருக்கும். அதனால், மின்சார விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும்போது நன்றாக யோசித்து, மின்னல் வேகத்தில் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும்.
மின்சார தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மின் கம்பியைத் தொட்டுக் கொண்டு இருந்தால், முதலில் கையில் ரப்பர் கை உறையை அணிந்து கொண்டு மெயின் சுவிட்ச்சை ஆஃப் செய்து மின் ஓட்டத்தை நிறுத்த வேண்டும். அல்லது ப்ளக் கட்டையை எடுத்து, மின் கம்பியைத் துண்டித்து மின் ஓட்டத்தை தடை செய்ய வேண்டும்.
உயர் மின் அழுத்தக் கம்பிகள் அறுந்து விழுந்து பாதிக்கப்பட்டவர் கம்பியைத் தொடாத நிலையில் கிடந்தாலும் அவரை நெருங்குவதோ, நேரடியாகத் தொட்டுத் தூக்குவதோ கூடாது. அதற்கு முதலில் மின் ஓட்டத்தை நிறுத்தி, பெரிய, ஈரமில்லாத காய்ந்துபோன மரக்கட்டை அல்லது கயறு மூலம் பாதிக்கப்பட்டவரை அப்புறப்படுத்தி நாடித்துடிப்பை பரிசோதிக்க வேண்டும்.
இதயத் துடிப்பு தடைபட்டு இருந்தால், மார்புக்கு மத்தியில் நமது உள்ளங்கையால் நன்றாக அழுத்தி இதயம் செயல்படத் தூண்ட வேண்டும். சுவாசம் தடைபட்டு இருந்தால், பாதிக்கப்பட்டிருப்பவரின் வாய் அல்லது மூக்குப் பகுதியில் நம் வாயைப் பொருத்தி பலமாக ஊதி செயற்கை சுவாசம் கொடுத்து, பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்