நள்ளிரவில் திடீரென அகற்றப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள்: பெரும் பரபரப்பு
சமீபத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டது. ஆனால் இந்த சிலை ஜெயலலிதா போன்றே இல்லை என்ற சர்ச்சை எழுந்து வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய பகுதிகளில் தடையை மீறி வைக்கப்பட்ட எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டதால், போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது
திருவண்ணாமலை மாவட்டத்தில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டதாக வந்த புகார் காரணமாக திடீரென நேற்று நள்ளிரவில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு திருவண்ணாமலை போலீசார் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை அகற்றினர்.
இது குறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் உடனடியாக சிலைகள் அகற்றும் இடத்தில் குவிந்து சிலைகளை அகற்றக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதே போல், ஆரணியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளை போலீசார் இரவோடு இரவாக அகற்றினர்.