கமல் கட்சியில் 2 லட்சம் உறுப்பினர்கள்! ஓட்டாக மாறுமா?
நடிகர் கமல்ஹாசன், ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய கட்சியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ள நிலையில் அவரது கட்சியில் ஒருசில நாட்களில் 2 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இணையதளம் மூலம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு உறுப்பினர்களாக சேர்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சியில் தலைமையகம் இதுவரை சுமார் 2 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளதாக அரிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரபூர்வமான இணையதளம் மூலம் ரசிகர்கள், பொதுமக்களை உறுப்பினர்களாக சேர்த்து வருவதாகவும், கட்சி தொடங்கப்பட்ட ஒருசில நாட்களில் 2 லட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளது ஒரு சாதனையே என்றும் கருதப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் பாஜகவும் இதேபோல் டிஜிட்டல் முறையில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்த்தது. ஆனால் அக்கட்சி சமீபத்தில் முடிந்த ஆர்.கே.நகர் தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தது. எனவே கட்சியில் உறுப்பினர்களாக சேருபவர்கள் எல்லாம் வாக்களிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்