தமிழகத்தில் பெரியார், கேரளாவில் காந்தி! சிலைகள் படும் பாடு

தமிழகத்தில் பெரியார், கேரளாவில் காந்தி! சிலைகள் படும் பாடு

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெரியார் சிலை குறித்த சர்ச்சையால் அசாதாரணமான நிலை இருந்து வரும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக கட்சி திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, பாஜகவினர் திரிபுராவில் கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் அவர்களின் சிலையை அகற்றினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில், தற்போது திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல, தமிழகத்திலும் ஜாதி வெறியர் பெரியாரின் சிலை அகற்றப்படும் என பதிவிட்டார்.

எச்.ராஜாவின் இந்தக் கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கண்டனங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, எச்.ராஜா தனது பதிவை நீக்கினார்.

இதனிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைவர்களின் சிலை அகற்றப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இதன்பின், மாநில அரசுகள் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முறையான நடவடிக்கை எடுக்கவும், இந்த சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள தலிபரம்பா தாலுக்கா அலுவலகத்தில் வைக்கிப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது. தற்போது, போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply