எச்.ராஜாவை காட்டுமிராண்டி என்று விமர்சித்த ரஜினி
பெரியார் சிலை அகற்றப்படும் என பதிவு செய்ததும், வேலூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதும் காட்டுமிராண்டிதனமான செயல் என நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் , பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில், தற்போது திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல, தமிழகத்திலும் ஜாதி வெறியர் பெரியாரின் சிலை அகற்றப்படும் என பதிவிட்டார். எச்.ராஜாவின் இந்தக் கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கண்டனங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, எச்.ராஜா தனது பதிவை நீக்கினார்.
இதனிடையே, பாஜக கட்சியைச் சேர்ந்த சிலர் வேலூரில் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தினர். அவர்களைப் பொதுமக்கள் அடித்து துவைத்து போலீஸிடம் ஒப்படைத்தனர். இதற்கு பின், தமிழகம் முழுவதும் இருக்கும் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த எச்.ராஜா, “சிலைகளை உடைப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை.எனது நிர்வாகி எனக்குத் தெரியாமல் அதை எனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனால் அந்தப் பதிவையும், அந்த நிர்வாகியையும் நீக்கிவிட்டேன்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தத் தொடர் நிகழ்வுகள் சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், “பெரியார் சிலை அகற்றப்படும் என்று கூறியதும், பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதும் காட்டு மிராண்டிதனமான செயல்” என்று கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், எச்.ராஜாவின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.