காட்டுத்தீயை தடுக்க வந்த கமாண்டோ படையினர்:
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் டாப் ஸ்டேசன் உள்ளது. இது சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைப்பகுதியாகும். குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் போடியில் இருந்து குரங்கணிக்கு பஸ், ஜீப் போன்ற வாகனங்களில் வருகின்றனர். பின்னர் அங்கு இருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக டாப் ஸ்டேசனுக்கு மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, குரங்கணி வனப்பகுதியில் திருப்பூர் மற்றும் சென்னையை சேர்ந்த இரண்டு குழுவினர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் பலர் சிக்கி கொண்டனர். காட்டுத்தீ குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்டுத்தீயில் சிக்கியவர்களில் இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தேனி மாவட்ட கலெக்டர் கூறினார். மலைப்பகுதியில் சிக்கியவர்களை மீட்க வனத்துறையினருடன் போலீசாரும், ராணுவ துறையினரும் சேர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தை தடுக்க கோவை சூலூரில் இருந்து புறப்பட்ட கமாண்டோக்கள் குழு மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தது. மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக 4 வாகனங்களில் குரங்கணி மலைப்பகுதிக்கு அதிகாலை 3 மணியளவில் கமாண்டோக்கள் குழுக்கள் சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.