டிரம்ப் டவரில் பயங்கர தீ விபத்து: நியூயார்க் மக்கள் அதிர்ச்சி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டிரம்ப் டவரின் 50-வது மாடியில் நேற்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் உள்ளது. 58 மாடிகள் கொண்ட இந்த பிரமாண்ட கட்டிடத்தின் மேற்பரப்பில் உள்ள 3 அடுக்குகளில் அவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அதிபராக இருந்தாலும் டிரம்ப் இந்த வீட்டில்தான் பெரும்பாலும் நகரில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த நிலையில், நேற்று மாலை 5.30 மணிக்கு டிரம்ப் டவரின் 50-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அந்த தீ பத்த காற்றின் காரணமாக மளமளவென பரவியது.
இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. சுமார் 140க்கு மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சிக்கிய ஒருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருவதாக முதல் கட்டமாக தகவல்கள் வெளியானது.
டிரம்ப் டவரில் ஏற்பட்ட தீயை போராடி விரைவில் அணைத்த தீயணைப்பு படை வீரர்களுக்கு டிரம்ப் டுவிட்டரில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வாஷிங்டன்னில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.