பணப்பற்றாக்குறையை தவிர்க்க மத்திய அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் பணப்பற்றாக்குறையை போக்க ரூ.500 நோட்டுக்கள் அதிகளவில் அச்சடிக்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பொருளாதார விவகாரத்துறை செயலாளர் எஸ்.சி. கார்க் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-
கடந்த ஒரிரு மாதங்களாக பணத்தின் தேவை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது. ஒரு மாதத்திற்கு சராசரி தேவை ரூ.200 கோடி என்ற நிலைக்கு மாறாக, ஏப்ரல் மாதத்தில் முதல் 13 நாட்களில் மட்டும் ரூ.450 கோடி தேவைப்பட்டது.
பணத் தேவையை பூர்த்தி செய்வதற்கு சப்ளையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் கூடுதலாக பணம் அச்சிடப்படும். உதாரணமாக, ரூ.500 நோட்டுக்களை தினமும் 5 மடங்கு அதிகமாக, அதாவது ரூ.2500 கோடிக்கு அச்சிடப்படும். 500 ரூபாய் நோட்டுக்கள் அதிகமாக அச்சடிப்பதன் மூலம் மாத சப்ளை 70,000-75,000 கோடியாக இருக்கும்.
தற்போது தேவைக்கும் அதிகமாக 2.5 முதல் 3 டிரிலியன் ரூபாய் வரை இருப்பு வைத்திருந்தோம். கடந்த சில தினங்ளாக பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிக அளவில் சப்ளை செய்யப்பட்டுள்ளது. தற்போது ரூ.1.75 டிரில்லியன் ரூபாய் அளவுக்கு இருப்பு உள்ளது. எனவே, பணத்தட்டுப்பாடு என்று பீதியடைந்து பொதுமக்கள் பணத்தை பதுக்கி வைக்க தேவையில்லை என்று கூறினார்.