கருணாநிதி, ஸ்டாலினுடன் தெலுங்கானா முதல்வர் இன்று சந்திப்பு:
காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் இன்று சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர்களை சந்திக்கின்றார். இந்த சந்திப்பில் தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மேலும் ஒருசில தமிழக அரசியல் தலைவர்களையும் சந்தித்து 3வது அணி குறித்து ஆலோசிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நிருபர்களிடம் கூறுகையில், “கூட்டாட்சி முன்னணிக்கு அடித்தளமே இல்லை என்று ராகுல்காந்தி கூறி இருக்கிறார். தெலுங்கானா மக்கள் எனக்கு அளித்துள்ள அபார ஆதரவு, கடவுளின் ஆசியுடன் டெல்லியில் பூகம்பத்தை ஏற்படுத்துவேன். விரைவில் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை சந்திப்பேன். அடுத்த 2, 3 மாதங்கள் நாடு முழுவதும் இதற்காக அலைந்து திரிந்து மாநில கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவேன்” என்றார்.