வேலைக்கு போகும் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பது எப்படி?

வேலைக்கு போகும் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பது எப்படி?

பெண்கள் அனைவருமே தாய்மைக்கு ஏங்குகிறார்கள். கர்ப்பிணியாகி, பிரசவித்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி வளர்க்கவும் விரும்புகிறார்கள். ஆனால் சந்தோஷமாக குழந்தையை பெற்றெடுத்த பின்பு, அவர்கள் வேலைக்கு போகும் பெண்கள் என்றால் சரியான நேரத்திற்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவித்துப்போகிறார்கள்.

அதனால் வேலையை விட்டுவிட தயாராகிறார்கள். வேலையை ராஜினாமா செய்துவிட்டு குழந்தையை பராமரிக்கும் அவர்கள், குழந்தை வளர்ந்த பின்பு மீண்டும் வேலை தேடத் தொடங்குகிறார்கள். அப்போது அவர்கள் எதிர்பார்த்த வேலை அமைவதில்லை. அதனால் தங்கள் பணிரீதியான வாழ்க்கையை அவர்கள் மீண்டும் முதலில் இருந்தே ஆரம்பிக்கவேண்டியதிருக்கிறது. இது அவர்களை கவலைக்குள்ளாக்குகிறது.

தாய்மையடைவது என்பது இப்போது சிரமமான ஒன்றாக இருக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் தாய்மையடையாவிட்டால், அதற்கான சிகிச்சைகளுக்காக அலைய வேண்டியதாகிவிடும். கர்ப்பமாக தாமதமானால் பலருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டிய திருக்கும். ஆனால் கர்ப்பிணியாகி குழந்தை பெற்றுவிட்டால், தாய் மட்டும் செய்ய வேண்டிய சில பராமரிப்புகள் இருக்கின்றன.

அதில் குறிப்பிடத்தக்கது தாய்ப்பால் புகட்டுவது. முதல் ஆறு மாதங்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும். பின்பும் தாய்ப்பால் கொடுத்தபடியே, வேறு மென்மையான உணவுகளையும் வழங்கவேண்டும். முதல் ஆறு மாதங்கள் முழுநேர உணவாக தாய்ப்பால் கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்போதுதான் பெண்கள் முடிவெடுக்க முடியாமல் திணறி வேலையை விட்டுவிடுகிறார்கள். 50 சதவீத பெண்கள், தாய்ப்பால் புகட்டும் காலத்தில் வேலையை ராஜினாமா செய்துவிடுகிறார்கள் என்று சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பலர் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆனதும் வேலைக்கு செல்ல முன்வருகிறார்கள். ஆனால் பணியிடத்தில் அவர்களால் நிம்மதியாக வேலைபார்க்க முடிவதில்லை. குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லையே என்ற ஏக்கம் குற்றஉணர்வாக மாறிவிடுகிறது. பால் தேங்கி அதுவாக சுரக்கும் நிலையும் உருவாகிறது. துணி நனைந்து போவதும் அவர்களுக்கு பணி இடத்தில் நெருக்கடியை உருவாக்குகிறது. அதனால் அவர்களால் வேலையை முழு ஈடுபாட்டோடு செய்ய முடியாத நிலை தோன்றுகிறது.

பிரசவகால விடுமுறை முடிந்து வேலைக்கு செல்லும் தாய்மார்கள் அங்கே பாலை எடுத்து பாதுகாக்கலாம். பிரெஸ்ட் பம்ப் உதவி யோடு இதை எளிதாக செய்யலாம். அம்மா அருகில் இல்லாவிட்டாலும் இதன் மூலம் குழந்தைக்கு பால் கிடைக்கும். பிரிட்ஜில்வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு தேவையான பாட்டில்கள் மெடிக்கல் ஸ்டோர்களில் கிடைக்கும். இதனை வாங்கி பயன்படுத்தும் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பாதுகாப்பும் சுத்தமும் நிறைந்த அறையும், பிரிஜ்ஜும் இருந்தால் அதற்கு போதுமானது.

எல்லா நாட்டு சட்டங்களும் இப்போது தாய்மைக்கு தனி மரியாதை அளிக்கின்றன. அமெரிக்காவில், 12 மாதத்திற்கு கீழ் உள்ள குழந்தைகளின் தாய்மார்கள் பிரெஸ்ட் பம்ப் மூலம் பாலை சேகரிக்க, அவர்கள் வேலைபார்க்கும் நிறுவனங்களே சுகாதாரமான தனி அறை அமைத்துக்கொடுக்கவேண்டும் என்ற சட்டம் உள்ளது. தாய்மார்கள் காலை முதல் மாலை வரை தாய்ப்பாலை வெளியேற்றாமலே இருந்தால், அது சுரக்கும் அளவு காலப்போக்கில் குறைந்துபோய்விடும்.

அதனால் காலையில் பால் கொடுத்துவிட்டு, பின்பு மாலையில் போய் கொடுத்தால் போதும் என்று தாய்மார்கள் நினைத்தால் இயல்பாகவே பாலின் அளவு குறைந்திடும். ஆகவே பிரெஸ்ட் பம்ப் மூலம் பாலை எடுத்து சேகரித்து, குழந்தைக்கு வழங்குவது சரியான நடை முறையாகும். வேலைக்குப் போகும் பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைக்கு பால்புகட்ட வசதியாக அந்த நிறுவனங்களே நேரம் ஒதுக்கி, ‘நர்சிங் பிரேக்’ வழங்கவேண்டும் என்ற நடைமுறையும் உள்ளது.

தாய்ப்பால், குழந்தைகளுக்கு மிகுந்த பலனளிப்பது என்பது எல்லோருக்கும் தெரியும். கூடவே தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்களுக்கும் நிறைந்த பலனைத் தருகிறது. பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். அவர்கள் சரியாக, தொடர்ச்சியாக பாலூட்டிவந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். அதோடு அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் சூழல் குறையும். கருப்பை புற்று நோய், சர்க்கரை நோய், எலும்பு தேய்மானம் போன்றவைகள் ஏற்படு்ம் சூழ்நிலையும் குறையும். அதோடு தாய்ப்பால் புகட்டுதல் ஒரு கருத்தடை முறைபோன்றும் செயல்படும். அடுத்து கர்ப்பிணியாவதும் தள்ளிப்போகும்.

Leave a Reply