அரசியலமைப்புக்கு எதிரானது: கர்நாடக கவர்னரின் முடிவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

அரசியலமைப்புக்கு எதிரானது: கர்நாடக கவர்னரின் முடிவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

கர்நாடக மாநிலத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்த கவர்னரின் முடிவு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் எந்த அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸும், ஜேடிஎஸ் கட்சியும் இணைந்து பெரும்பான்மையை காட்டியபோதிலும் கவர்னர் வஜுபாய் வாலா, 104 இடங்களை பெற்ற பாஜகவையே ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பின்பேரில் முதல்வராக எடியூரப்பா இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் இந்த செயலை கண்டித்து கர்நாடக சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதா தளமும் போதிய பெரும்பான்மையை உள்ள நிலையிலும் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இது முற்றிலும் தன்னிச்சையான முடிவு மற்றும் அரசியல் அமைப்புக்கு எதிரானது ஆகும். இது குதிரை பேரத்துக்குத்தான் வழிவகுக்கும். அத்துடன் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண செய்துவிடும். ஊழலில் திளைத்துள்ள அதிமுக அரசை பாதுகாக்க பாஜகவின் முயற்சிகள் அனைத்தையும் தமிழக மக்கள் அறிவர். அதுபோல் அவர்களுக்கு சட்டசபையில் போதிய பெரும்பான்மை இல்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply