ரூ. 4 லட்சம் கோடி தங்கச் சுரங்கம்: அருணாச்சலபிரதேசத்தில் தோண்டும் சீனா
இந்தியா, சீனா எல்லைகளில் அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு இருநாட்டின் நல்லுறவு பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திடீரென அருணாச்சல பிரதேச மாநிலத்தின் எல்லையில் தங்கச்சுரங்கம் இருப்பதாகவும், அதை தோண்டும் முயற்சியில் சீனா இருப்பதாகவும் வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது
சீனா – இந்தியா இடையே தங்கச் சுரங்கம் குறித்து மீண்டும் மோதல் எழும் சூழல் உருவாகியுள்ளது. சீன எல்லையை ஒட்டிய திபெத்திய பகுதியில் தங்கச் சுரங்கம் அமைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியில் இந்தச் சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தின் கீழ் டன் கணக்கில் தங்கம், வெள்ளி மற்றும் வேறு சில உலோகங்கள் உள்ளதாகவும், இவற்றின் பெரும்பகுதி இந்தியப் பகுதிக்குள் உள்ளதாகவும் தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள தங்கத்தின் மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய் இருக்குமாம்.
இந்தியாவின் ஒப்புதல் இல்லாமல் அங்கு தங்கச் சுரங்கத்தை வெட்டித் தோண்டும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது. மேலும் சுரங்கத்தை விரிவுபடுத்தும் பணிகளையும் வேகப்படுத்தி வருகிறது. சீன அரசின் சுரங்கத்துறை நேரடியாக இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில், பிரதமர் மோடி- சீன அதிபர் இருவரும் சந்தித்தபோதே இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது. தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொள்ள இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அதை பெரிய அளவில் பிரச்சினையாக்க சீனா விரும்பவில்லை. ஆனால் தற்போது அங்கு தங்கம் எடுக்கும் பணியை சீனா வேகப்படுத்தியுள்ளது.
தங்கச் சுரங்கம் தோண்டும் பணியால், இந்திய – சீன உறவு சீர்கெட வாய்ப்புள்ளது, இந்தப் பிரச்சினை டோக்லாம் போல மாறுவதற்கும் வாய்ப்புள்ளது என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.