பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்கலாம், ஆனால் மோடி செய்ய மாட்டாரே: ப.சிதம்பரம்
பெட்ரோல் விலை தற்போது ரூ.80ஐ தாண்டி வரலாறு காணாத உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது. இப்படியே போனால் இன்னும் ஒருசில மாதங்களில் ரூ.100ஐ எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.25 வரை குறைத்து நுகர்வோர்களுக்கு பயன் தரலாம் என்றும் ஆனால் மோடி அரசுக்கு இதை செய்ய மனமிருக்காது என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பெட்ரோலில் லிட்டருக்கு 25 ரூபாய் வரை குறைக்க முடியும். ஆனால், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு செய்யமாட்டார்கள். பெட்ரோலில் லிட்டருக்கு ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய் என பெயரளவுக்கு குறைத்து, மத்திய அரசு மக்களை ஏமாற்றும்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தபோது, பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 15 ரூபாய் வரை மத்திய அரசு சேமித்தது. அதன் மீது கூடுதலாக 10 ரூபாய் வரிவிதித்து மக்களுக்கு விற்பனை செய்து மத்திய அரசு லாபம் சம்பாதித்து வருகிறது.
இப்போது அதைக் குறைக்கலாமே. இப்போது மத்திய அரசுக்கு பெட்ரோல் விற்பனையின் மூலம், லிட்டருக்கு 25 ரூபாய் கிடைத்து செல்வச்செழிப்போடு இருக்கிறது. உண்மையில் இந்தப்பணம் அனைத்தும் சாமானிய மக்களுக்கும், சராசரி நுகர்வோர்களுக்கும் சென்று சேர வேண்டிய பணமாகும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்