தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற கம்போடிய இளவரசரின் மனைவி பலி
கம்போடியா நாட்டில் வரும் ஜூலை மாதம் 29-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டின் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. இதில் அந்நாட்டின் இளவரசரும், முன்னாள் பிரதமருமான நோரோடோம் ரனாரித் என்பவர் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடுகிறார். இவர் கம்போடிய மன்னர் சிஹாமோனியின் ஒன்றுவிட்ட சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ரனாரித் மற்றும் அவருடைய மனைவி அவுக் பால்லா ஆகிய இருவரும் நேற்று பிரீச் ஷிஹானுக் மாகாணத்திற்கு கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஒரு கார் அவர்கள் இளவரசர் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ரனாரித்தும், அவுக் பால்லாவும் படுகாயம் அடைந்தனர். இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சையின் பலனின்றி சில நிமிடங்களில் அவுக் பால்லா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணம் அடைந்தார். ரனாரித் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.