தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை – தங்க தமிழ்ச்செல்வன்

தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை – தங்க தமிழ்ச்செல்வன்

18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கு விசாரணை கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாம் நீதிபதி நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 18 எம்.எல்.ஏக்களில் ஒருவரும் தினகரனின் ஆதரவாளருமான தங்க தமிழ்ச்செல்வன் அவரது சார்பில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெறப்போவதாகவும், மேலும் ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்து மீண்டும் தேர்தலை சந்திக்கலாம் என வலியுறுத்தினார்.

இதையடுத்து டிடிவி தினகரனின் உத்தரவு இன்றி இவர் இந்த கருத்தை தெரிவித்ததாக கூறப்பட்டது. அதற்கு பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன், அவரது விருப்பப்படி செய்துகொள்ளும்படி டிடிவி தெரிவித்ததாக கூறியிருந்தார்.

இதனால், டிடிவி தினகரனுக்கும், தங்க தமிழ்ச்செல்வன் உட்பட சில ஆதரவாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் அதனால் தான் இதுபோன்ற கருத்துக்களை தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், 18 எம்.எல்.ஏக்களும் டிடிவி தினகரனுடன் ஒற்றுமையாக இருப்பதாகவும், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்ததால் மட்டுமே வழக்கை வாபஸ் பெறப்போவதாக அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற அவதூறுகளை பரப்ப வேண்டாம் எனவும், நாங்கள் மிகவும் வெளிப்படையாகவே இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply