சே குவேராவின் டீ-ஷர்ட் அணிந்த வீரர், ராணுவத்திலிருந்து நீக்கம்!
கியூப புரட்சியாளர் சே குவேராவின் டீ-ஷர்ட் அணிந்திருந்த ராணுவ வீரர் ஒருவரை, அமெ ரிக்க ராணுவத்திலிருந்து நீக்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின், நியூயார்க் மாகாணத்தில் உள்ள வெஸ்ட் பாய்ண்ட் ராணுவ பயிற்சி மையத்தில் ஸ்பென்சர் ரபோன்(26) என்ற வீரர் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை, தனது ராணுவ பயிற்சியை முடித்த ஸ்பென்சர் ரபோன், கம்யூனிசத்துக்கு ஆதரவான புகைப்படங்களை பகிர்ந்துள்ளதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அந்த புகைப்படத்தில், தனது ராணுவ உடைக்குள் ஸ்பென்சர் அணிந்திருந்த டீ-ஷர்ட்டில், சே குவேராவின் படம் இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து ஸ்பென்சர் ரபோன் மீது விசாரணையைத் தொடங்கிய ராணுவ அதிகாரிகள், அவரை ராணுவத்திலிருந்து நீக்கி உத்தரவிட்டனர். ஆனால் இதற்கு சற்றும் வருத்தப்படாத ஸ்பென்சர் ரபோன், ஃபோர்ட் டிரம் ராணுவ குடியிருப்பின் முன்நின்று, தன் கையின் நடுவிரலை உயர்த்தி படமெடுத்ததுடன், ‘ஒன் ஃபைனல் சல்யூட்’ என்று தலைப்பிட்டு அதை இணையதளங்களில் பகிர்ந்துள்ளார்.
ஸ்பென்சர் ரபோன் இவ்வாறு செய்வது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே கடந்த 2016 ஆம் ஆண்டு, வெஸ்ட் பாய்ண்ட் மையத்தில் ராணுவ பயிற்சியை முடித்த ஸ்பென்சர், ‘கம்யூனிசம் வெற்றிபெறும்’ என்று தனது தொப்பியில் எழுதி அந்த படத்தை வெளியிட்டு சர்ச்சையை உண்டாக்கினார்.
தன்னை ஒரு புரட்சிகர சோசியலிசவாதி’ என்று கூறும் ஸ்பென்சர் ரபோன், அடுத்த மாதம் சிகாகோ நகரில் நடைபெற உள்ள ‘சோசியலிசம் 2018’ மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.