பட்டா இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்?
சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடு வாங்குகிறீர்கள். முறையாகப் பத்திரப் பதிவு செய்து ஆவணங்களைப் பத்திரமாக வைத்துக்கொள்கிறீர்கள். அந்த வீடு உங்களுக்கு சொந்தமாகிவிட்டது என்றுதானே நினைக்கிறீர்கள். அதான் இல்லை. நீங்கள் வாங்கிய வீட்டுக்கான பட்டாவையும் உங்கள் பெயரில் மாற்றினால்தான் அந்த வீடு உங்களுக்கு சொந்தமாகும். அடுக்குமாடி வீடு என்பதால், உட்பிரிவு பட்டாதான் கிடைக்கும். ஒரு வேளை பட்டா வாங்காமல், பத்திரப்பதிவு ஆவணத்தோடு விட்டுவிட்டால் சொத்து என்னவாகும்?
அடுக்குமாடிக் குடியிருப்பில் வீட்டையோ அல்லது ஒரு மனையில் ஒரு பகுதியையோ வாங்கி, பத்திரப்பதிவு செய்துவிட்டால் சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று எப்போதும் நினைக்கக் கூடாது. அப்படி வாங்கிய சொத்துக்கு பட்டாவும் வாங்க வேண்டும். ஒரு மனையில் ஒரு பகுதியை வாங்கியிருந்தாலோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கியிருந்தாலோ அதற்கு உட்பிரிவு பட்டா வாங்குவது மிகவும் அவசியம். ஏனென்றால், நாம் வீடு வாங்குவதற்கு முன்போ அல்லது மனையில் ஒரு பகுதியை வாங்குவதற்கு முன்போ, அந்த மனை இன்னொருவருக்குச் சொந்தமாக இருந்திருக்கும். அந்த மனைக்குரிய பட்டா அவரிடமே இருக்கும். ஒரு வேளை உட்பிரிவு பட்டாவை வாங்காமல் இருந்துவிட்டால், பிற்காலத்தில் சொத்து சம்பந்தமாக வில்லங்கம் வரலாம்.
வாங்கப்படும் வீடு அல்லது மனையை பத்திரப்பதிவு செய்வதுக்கொள்வதோடு பத்திரப்பதிவு பணி முடிந்துவிடுகிறது. ஆனால், வீடு அல்லது மனை அமைந்துள்ள நிலங்களை வகைப்படுத்தி, அது எந்த வகையான நிலம் என்பதை ஆவணப்படுத்துவது வருவாய்த் துறையின் வேலை. இதன் அடிப்படையில் நிலங்களின் உரிமையாளர்களுக்கு அரசு பட்டாவையும் வழங்கியிருக்கும். வருவாய்த் துறை அளித்த அந்தப் பட்டா ஒருவரிடம் இருக்கும்போது அந்த மனை அவருக்குரியதாகவே இருக்கும். கிரயப்பத்திரம் இருந்தாலும், பட்டாதான் செல்லுபடியாகும். அடுக்குமாடி வீடு எனும்போது அந்த மனை பில்டர் பெயரிலேயே இருக்கும். வீடு வாங்கிய ஒவ்வொருவரும் உட்பிரிவு பட்டா வாங்காமல் இருந்தால், தன்னுடைய பட்டா மூலம் எதிர்காலத்தில் பட்டா வைத்துள்ளவர் உரிமை கோரலாம். அந்தப் பட்டாவைக் காட்டி இன்னொருவருக்கு சொத்தை விற்கவும்கூட செய்யலாம். அதனால் சிக்கல்கள் ஏற்படலாம்.
வருவாய்த் துறையின் ஆவணப்படி உங்கள் அடுக்குமாடி வீடு அமைந்துள்ள குறிப்பிட்ட இடத்துக்கு உட்பிரிவு பட்டா இல்லை என்றால் சிக்கல் கண்டிப்பாக எழலாம். உட்பிரிவு பட்டா பெறாமல் இருக்கும்பட்சத்தில் சொத்தை விற்றவருக்கு அனுகூலமாகிவிடலாம்.
அதெல்லாம் சரி, அடுக்குமாடிக்கோ வாங்கிய மனையின் ஒரு பகுதிக்கோ உட்பட்டா எப்படி வழங்குவார்கள்? நீங்கள் உட்பிரிவு பட்டா கோரி விண்ணப்பித்தாலோ அல்லது ஒரு மனையில் ஒரு பகுதியை வாங்கியவர்கள் உட்பிரிவு பட்டா கேட்டு விண்ணப்பித்தாலோ, சம்பந்தப்பட்ட அந்தச் சொத்து பிரிக்கப்பட்டு, மனையை உட்பிரிவு செய்து வருவாய்த் துறை பட்டா வழங்குவார்கள். உதாரணத்துக்கு உங்கள் மனையின் சர்வே எண் 50/1 என்று வைத்துக்கொள்வோம். 5 அடுக்குமாடி உரிமையாளர்கள் உட்பிரிவு பட்டா கேட்டு விண்ணப்பித்தால் 50/1ஏ, 50/1பி, 50/1சி… என வரிசைப்படுத்தி உட்பிரிவு பட்டா வழங்குவார்கள். ஒரு மனையின் ஒரு பிரிவை வாங்கியிருந்தால் மனை இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இதேபோலவே உட்பிரிவு பட்டா வழங்குவார்கள்.
மேலும் குறிப்பிட்ட அந்தச் சொத்தின் வரைப்படத்தில் நமக்குரிய பகுதியைக் குறிப்பிட்டு வருவாய்த்துறை ஆவணப்படுத்தி வைப்பார்கள். பட்டாவும் கிரயப்பத்திரமும் உங்களிடம் இருந்தால், அது அசைக்க முடியாத சொத்து ஆவணமாகிவிடும். சொத்தின் பழைய உரிமையாளர் எக்காரணம் கொண்டும் சொத்துக்கு உரிமைக் கொண்டாட முடியாத நிலை உருவாகிவிடும்.
இதுவரை அடுக்குமாடி வீட்டையோ அல்லது மனையின் ஒரு பகுதியையோ வாங்கி, பத்திரப் பதிவு செய்து பட்டா பெறாமல் இருந்தால், இனியும் தாமதிக்க வேண்டாம். உடனே வருவாய்த் துறை அலுவலங்களில் பட்டா கேட்டு விண்ணப்பியுங்கள்.