ஒரே நாடு ஒரே தேர்தல்: காங்கிரஸ் ஒத்துழைப்பு கொடுக்குமா?
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முடிவில் மாற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும், கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பாரதீய ஜனதாவின் யோசனை தவறானது என்று கூறிய காங்கிரஸ் தற்போது இந்த திட்டத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங் நேற்று டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிஅம் பேசுகையில், பாராளுமன்றம் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பிரச்சினை குறித்து காங்கிரஸ் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று கூறினார்.
இதன்மூலம், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு ஆதரவா? எதிர்ப்பா? என்பதில், காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை இன்னும் தெளிவுபடுத்த இயலாத நிலையில் இருப்பது தெரிகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் தேசிய கட்சிகளுக்கு லாபம் என்பதால் காங்கிரஸ் இதற்கு ஒத்துழைக்கும் என்றே கருதப்படுகிறது.