பாலியல் குற்றம் செய்தால் டிரைவிங் லைசென்ஸ் கிடையாது: முதல்வர் அதிரடி அறிவிப்பு
ஹரியானா மாநிலத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் பென்சன் கிடையாது என்றும் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மனோகர் கட்டார் மேலும் கூறியதாவது: பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு வாகன உரிமம், துப்பாக்கி உரிமம், வயதானவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரத்து செய்யப்படும்.
நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பு வரும் வரையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இந்த வசதிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படும். வழக்கு விசாரணை முடிவில் குற்றவாளி என நிரூபணமாகி, தண்டனை வழங்கப்பட்டால் எந்த காலத்திலும் இழந்த சலுகைகளை அவர்களால் பெற முடியாது. பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு துவங்கியுள்ள இத்திட்டம் வரும் சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) அல்லது ரக்ஷா பந்தன் (ஆகஸ்ட் 26) அன்று துவங்கப்படும்.
மேலும் காவல்நிலையத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் மற்றும் ஈவ்டீசிங் வழக்குகள் தடையின்றி விசாரிக்கப்படும். விசாரணை அதிகாரிகள் பாலியல் குற்ற வழக்கு விசாரணையை 1 மாதத்திலும் மற்றும் ஈவ்டீசிங் வழக்கு விசாரணையை 15 நாட்களிலும் விரைந்து முடிக்க வேண்டும். ஆறு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்படும். இது குறித்து பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகளை விரைவில் சந்திக்கவுள்ளேன்.
இவ்வாறு ஹரியானா மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்