அனைத்து சமையல் எரிவாயுவுக்கும் மானியம்: தேர்தல் காரணமா?
எல்.பி.ஜி., சமையல் எரிவாயுவுக்கு மட்டும் தற்போது மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் வெகுவிரைவில் மற்ற சமையல் எரிவாயு பயன்பாட்டுக்கும் மானியம் வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நிடி ஆயோக்கின், துணை தலைவர் ராஜிவ் குமார் கூறியதாவது: எல்.பி.ஜி., சமையல் எரிவாயுவுக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. ஆனால், கிராமப்புறங்களில், சாண எரிவாயு பயன்படுத்தப்படுகிறது.
மேலும், பல நகரங்களில், குழாய் வழியாக வழங்கப்படும் இயற்கை எரிவாயு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம், மானியம் வழங்கப்படுவதில்லை.இதன் காரணமாக, எல்.பி.,ஜி., எரிவாயுவில் இருந்து, இயற்கை எரிவாயுவுக்கு மாற, பலர் தயங்குகின்றனர்.
எனவே, மத்திய அரசு வழங்கி வரும் மானியத்தை, எல்.பி.ஜி., எரிவாயுவுக்கு மட்டுமின்றி, மற்ற சமையல் எரிவாயு பயன்பாட்டுக்கும் வழங்க, அரசு ஆலோசனை செய்து வருகிறது.எனவே, எல்.பி.ஜி., மானியம் என்பதை, பொதுவான சமையல் எரிவாயு மானியமாக மாற்றுவது குறித்து, நிடி ஆயோக் பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.