வேலை கிடைக்க அமெரிக்க இளைஞர் செய்த நூதன வழி
மற்ற நாடுகளை போலவே அமெரிக்காவிலும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடிவருகிறது. அங்குள்ள இளைஞர்கள் வேலை கிடைக்க போராடி வருகின்றனர். இந்த நிலையில் தனக்கு வேலை கிடைக்க அமெரிக்க இளைஞர் ஒருவர் நூதன வழியை கண்டுபிடித்துள்ளார்.
கலிஃபோர்னியாவை சேர்ந்த அந்த இளைஞர் டிராஃபிக் சிக்னலில் நின்று கொண்டு தமது ரெஸ்யூமை அந்த பக்கம் வருபவர்களிடம் விநியோகித்தார். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதால் அவருக்கு தற்போது 200-க்கும் மேற்பட்ட பணி வாய்ப்புக்கள் குவிந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆஸ்டினில் வெப் டெவலபராகப் பணியாற்றி வந்த டேவிட் கசாரெஸ் பணி தேடி கலிஃபோர்னியா வந்தார். அங்கு அவர் பார்த்த பகுதி நேரப் பணியும் கைவிட, வாடகை தர முடியாமல் தமது காரிலேயே தங்கியிருந்தார்.
பிச்சை எடுப்பதற்கு பதில் தமது பணி அனுபவம் குறித்து சுய விவரக் குறிப்புக்கள் அடங்கிய ரெஸ்யூமேவே டிராஃபிக் சிக்னலில் விநியோகித்து காலிப் பணியிடம் இருந்தால் அழைக்குமாறு கோரியிருந்தார். இதைப் பலரும் தங்களுடைய டுவிட்டர் கணக்கில் பகிர்ந்ததை அடுத்து, வித்தியாசமாகவும், வறுமையிலும் நேர்மையாகவும் சிந்தித்த அவருக்கு தற்போது 200-க்கும் மேற்பட்ட பணி வாய்ப்புக்கள் குவிந்துள்ளன.