பிரதமர் வேட்பாளராக இம்ரான்கான் போட்டியின்றி தேர்வு
சமீபத்தில் பாகிஸ்தான் நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதைத்தொடர்ந்து சிறிய கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் இம்ரான்கான் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கட்சியின் நாடாளுமன்ற கமிட்டியிடம் இம்ரான்கான் பிரதமர் பதவிக்கு தன்னை தேர்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்தார். பாகிஸ்தானில் உள்ள ஒரு ஓட்டலில் கட்சியின் நாடாளுமன்ற கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கட்சியின் மூத்த துணை தலைவரான ஷா முகமூத் குரேசி மற்றும் தலைவர்கள் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டதாக நாடாளுமன்ற கமிட்டி அதிகாரபூர்வமாக அறிவித்தது. தன்னை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ததற்காக நாடாளுமன்ற கமிட்டிக்கு இம்ரான்கான் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
முன்னதாக பாங்கியாலாவில் உள்ள தனது வீட்டுக்கு பிரதமருக்குரிய பாதுகாப்பு வாகனங்களுடன் இம்ரான்கான் சென்றது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் சுதந்திர தினமான வரும் 14-ந் தேதி இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்க இருப்பதாக அங்குள்ள வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின், ‘பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ்’ கட்சி பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்-மந்திரி ஷெபாஷ் ஷெரீப்பை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்து உள்ளது. 66 வயதான இவர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஆவார்.