வானில் பறந்து செல்லும் ஏரியல் டாக்ஸி: இந்தியாவில் அறிமுகம் செய்ய உபேர் திட்டம்
இந்தியா உள்பட உலகின் 5 நாடுகளில் வானில் பறந்து செல்லும் ஏரியல் டாக்ஸி சேவையை அறிமுகம் செய்ய உபேர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா உடன் உபர் நிறுவன அதிகாரிகள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்த் சின்ஹா, ‘உபர் நிறுவனம் 5 நாடுகளில் ஏர் டாக்ஸியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 22, 2018ல் உபர் நிறுவன தலைமை செயல் அதிகாரி தாரா கோஸ்ரொவ்ஷாஹியைச் சந்தித்து பேசிய போது, இந்தியாவில் ஏர் டாக்ஸிக்கான தேவை குறித்து எடுத்துரைத்தேன். தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் உபர் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
முதல்கட்டமாக வரும் 2023ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வர்த்தக ரீதியிலான ஏரியல் டாக்ஸி சேவையை உபர் தொடங்குகிறது. பயணிகள் ஏர் டாக்ஸிகளுக்கு சிறிய செங்குத்தான இயங்குதளம் மட்டுமே போதுமானது. அதில் டாக்ஸிகளை இறக்கி, ஏற்றிக் கொள்ளலாம். இதன் தேவை நகர்ப்புறங்களில் அதிக அளவில் இருக்கும்.
இந்த ஏர் டாக்ஸிகள் அதிக போக்குவரத்து நெருக்கடி இருக்கும் நகரங்களில் செயல்படுத்தப்படும். தரை வழிப் போக்குவரத்தை விட விரைவாக செல்ல விரும்புவோர், 30 முதல் 50 கி.மீ தூரத்தை ஏர் டாக்ஸிகள் மூலம் சென்றடையலாம். இதில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட்டிருக்கும்.
இவ்வறு சின்ஹா கூறினார்