சிம்புவின் கார், மொபைலை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
நடிகர் சிம்பு, அரசன் என்ற படத்திற்கு பெற்ற முன்பணத்தை வட்டியுடன் செலுத்த உத்தரவாதம் தராவிட்டால், அவரது வீட்டுப் பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும் என சென்னை ஐகோர்ட் எச்சரித்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம், நடிகர் சிம்புவை வைத்து அரசன் என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக நடிகர் சிம்புவுக்கு 50 லட்சம் ரூபாய் முன் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் சிம்பு படத்தில் நடிக்காததால், அவர் முன்பணமாக பெற்ற தொகையை திருப்பித் தர உத்தரவிடக் கோரி, பட நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன் விசாரணைக்கு வந்தபோது, குறித்த காலத்தில் பட தயாரிப்பு பணிகளை துவங்காததால், பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக நடிகர் சிம்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்களை நடிகர் சிம்பு தரப்பு சமர்ப்பிக்கவில்லை எனக்கூறிய நீதிபதி, 50 லட்சம் ரூபாயை வட்டியுடன் சேர்த்து, 85 லட்சம் ரூபாய்க்கு உத்தரவாதம் வழங்க நடிகர் சிம்புக்கு உத்தரவிட்டார்.
4 வாரங்களில் உத்தரவாதம் வழங்காவிட்டால் சிம்புவுக்கு சொந்தமான கார், மொபைல் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை ஜப்தி செய்ய நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார்.