அரசு உதவியிருந்தால் வெண்கலத்துக்கு பதில் தங்கம் வாங்கியிருப்பேன்: முதல்வரிடம் வீராங்கனை முறையீடு
அரசின் உதவி சரியான அளவில் இருந்திருந்தால் வெண்கல பதக்கத்திற்கு பதிலாக தங்கப்பதக்கம் வாங்கியிருப்பேன் என டெல்லி முதல்வரிடம் ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை திவ்யா கக்ரான் நேரடியாக குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற டெல்லி வீரர், வீராங்கனைகளுக்கு, டெல்லியில் முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை திவ்யா கக்ரான், காமன்வெல்த் போட்டியில் முன்பு பதக்கம் வென்ற போது, தேவையான உதவிகள் செய்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என முதலமைச்சர் கெஜ்ரிவாலிடம் நேரடியாக முறையிட்டார். அரசு உதவியிருந்தால் ஆசிய போட்டியில் வெண்கலத்துக்கு பதில் தங்க பதக்கம் வாங்கியிருப்பேன் என்றும் திவ்யா கூறினார்.
இதற்கு விளக்கமளித்த கெஜ்ரிவால், டெல்லி அரசு நிர்வாக ரீதியில் செயல்படும் அளவுக்கே அதிகாரம் இருப்பதாக கூறினார். இதனிடையே, ஆசிய போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசு தொகையை டெல்லி அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, தங்கம் வென்றவர்களுக்கு 1 கோடியும், வெள்ளி வென்றவர்களுக்கு 75 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு 50 லட்சமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.