பதக்கம் பறிபோனாலும் லட்சுமணன் சாம்பியனே: விளையாட்டுத்துறை அமைச்சர்
சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றும் தவறு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட தமிழக வீரரை விளையாட்டுத்துறை அமைச்சர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் 29 நிமிடம் 44.91 விநாடிகளில் ஓடி மூன்றாவது இடத்தை பிடித்தார். இருப்பினும் அவர் போட்டியின்போது ஆடுகளத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட பாதையை விட்டு சற்று விலகி ஓடியதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் லட்சுமணனை அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஆசிய விளையாட்டு போட்டி 10,000 மீ ஓட்டப் பந்தயத்தில் கோவிந்தன் லட்சுமணன் பதக்கம் வென்றார். ஆனால் சிறிய தவறு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் நம்முடைய சாம்பியன். நாம், நம்முடைய சாம்பியன் பக்கம் நிற்க வேண்டும். அவரை சந்தித்து வாழ்த்திய இந்தத் தருணத்தை பெருமையாக கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.