ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
வங்காளதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் துல்லியமாக பந்து வீசி ஆப்கானிஸ்தான் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்திருந்தது. ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த குல்பதின் நயீபும், ரஷித் கானும் பொறுப்புடன் ஆடினர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 250 ரன்களை கடந்தது.
பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 255 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ரஷித் கான் 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ரன்களை குவித்தார். வங்காளதேசம் சார்பில் ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 256 ரன்களை இலக்காக கொண்டு வங்காளதேசம் அணி சேசிங் செய்ய தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லிடோன் தாஸ் மற்றும் நிஸ்மல் ஹோசய்ன் ஆகியோர் களமிறங்கினர்.
ஆனால், ஆப்கானிஸ்தான் வீரர்களின் சிறப்பான பந்துவீச்சினால் லிடோன் தாஸ் 6 ரன்கள், ஹோசய்ன் 7 ரன்கள், மொமினுல் ஹகு 9 ரன்கள், முகமது மிதுன் 2 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தது அதிர்ச்சியளித்தனர்.
ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷகிப் அல் ஹசனும் 32 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் சுழலில் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால், வங்காளதேச அணி 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்து திணறியது. இதன் பின்னர் வந்த வீரர்களும் ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒருவர் பின் ஒருவராக ஆவுட்டாகி வெளியேறினர்.
இறுதியில், 42.1 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே அடித்ததால் ஆப்கானிஸ்தான் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரஷித் கான், முஜீப் அர் ரகுமான், குல்பதின் நயீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
அதிரடியாக விளையாடி 57 ரன்கள் குவித்து, 2 விக்கெட்டையும் சாய்த்து ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்ட ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.