வடகொரிய அதிபருடன் இரண்டாம் கட்ட சந்திப்பு: டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் வடகொரிய நாடுகளுக்கு இடையே இருந்த பரபரப்பை குறைக்கும் வகையில் இருநாட்டு அதிபர்களும் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டானர்.
இந்த நிலையில் மீண்டும் வடகொரிய அதிபரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்று வரும் 73-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தின் போது தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து பேசிய பின் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளதாவது :-
இது மிகவும் வித்தியாசமான உலகம், முன்னர் மிகவும் அபாயகரமான சூழல் நிலவியது. ஆனால் ஓர் ஆண்டுக்கு பிறகு காலம் மாறிவிட்டது. அணு ஆயுத அழிப்பில் கிம் காட்டும் அக்கறையால் நான் உற்சாகம் அடைந்துள்ளேன். எங்களுக்கு (டிரம்ப் மற்றும் கிம்) எந்த அவசரமும் இல்லை. யாரும் இதுவரை செயல்படுத்தாததை நாங்கள் செயல்படுத்தி அதில் முன்னேற்றம் கண்டுள்ளோம்.
எங்களுக்கு இடையிலான உறவு அசாதாரணமான வகையில் மிகவும் சிறப்பாக உள்ளது. எங்கள் இருவருக்கும் இடையே கூடிய விரைவில் இரண்டாம் கட்ட சந்திப்பு நடைபெறும்’ என அவர் தெரிவித்துள்ளார்.