இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினுக்கு சிறப்பான வரவேற்பு
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
முன்னதாக டெல்லி விமான நிலையம் வந்த புடினை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்றார். நாளை இரு நாடுகளுக்கும் இடையேயான 19-ஆவது இருதரப்பு உச்சி மாநாடு நடக்க உள்ளது. அதில் இரு தலைவர்களும் பங்கேற்கின்றனர். அப்போது சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எஸ்-400 என்ற ஏவுகணைத் தடுப்பு அமைப்பை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவது தொடர்பாக உடன்பாட்டு கையெழுத்தாகிறது. இதுதவிர சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய போர்க் கப்பல்களை வாங்குவதற்கும் இந்தியா திட்டமிட்டிருக்கிறது.
ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்திருப்பதால், அந்நாட்டிடம் இருந்து ராணுவ தளவாடங்களை இந்தியா கொள்முதல் செய்யக் கூடாது என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. மேலும் ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளும் நாடுகள் மீதும் தடை விதிக்கப் போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அதே சமயம் ரஷ்யா மீது தடைகள் விதிப்பதற்கு முன்னதாகவே எஸ்-400 ரக ஏவுகணை அமைப்பை கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், இதற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என இந்தியா கோரியிருந்தது. அமெரிக்க எதிர்ப்பை மீறும் வகையில், ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்யவுள்ளது.
வெளிவுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரவேற்றதை அடுத்து, ரஷ்ய அதிபர் புடினை பிரதமர் மோடி தனது இல்லத்திற்கு அழைத்து பேசினார். அலுவலக ரீதியாக அல்லது தனிப்பட்ட முறையில் பிரதமர் இல்லத்தில் இந்தச் சந்திபு நடைபெற்றது. இதனையடுத்து, நாளை காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அதிபர் புடின் சந்திக்கவுள்ளார்.