ஆதார் அட்டை- வாக்காளர் அட்டை இணைப்பு: நீதிமன்றம் புதிய உத்தரவு
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட ஆதார் அட்டையை பல ஆவணங்களுடன் இணைத்துவிட்டபோதிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் மட்டும் இணைப்பதில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இதுகுறித்து வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் தகவல்களுடன் இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அந்த வழக்கில், வாக்காளர் அடையாள அட்டையை வைத்து அரசியல் கட்சிகள் போலி வாக்காளர் பட்டியலை தயாரித்து வருவதாகவும், அதில் ஒரு வாக்காளருக்கு மூன்று பதிவுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு வாக்காளருக்கு இரண்டு பதிவுகள் இருந்ததாக புகார் எழுந்தது. அதன் பின்னர் அது நீக்கப்பட்டது. எனவே, வாக்காளர் பட்டியலில் நடக்கும் குளறுபடிகளை தவிர்க்க, வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது பற்றி பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.