களத்தில் இறங்கி பேசுங்க தம்பி: உதயநிதிக்கு அமைச்சர் சவால்

களத்தில் இறங்கி பேசுங்க தம்பி: உதயநிதிக்கு அமைச்சர் சவால்

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ஆதாரத்துக்கு, ‘அப்பட்டமான பொய்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அதிமுகவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தியது. இதில் பொள்ளாச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் பேசிய போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ‘கரப்ட்மணி’ என்று குறிப்பிட்டார். உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோ பதிவு பலராலும் ட்விட்டரில் பகிரப்பட்டது. இதனை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு பகிர்ந்தார்கள்.

இந்த வீடியோ பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் “நீங்க க(கு)ளத்தில் இறங்கிப் பார்த்து பேசுங்க தம்பி. எழுதிக் குடுக்கறதை அப்படியே பேசறீங்களே சரி பார்க்காமல்! வாங்களேன் எங்க ஊர் குளங்களை பார்க்க.தூர்வாரப்பட்டு தண்ணீர் நிரம்பி நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து இருக்கிறது. கோவை ஒரு முன் உதாரணம் என தமிழ்நாட்டுக்கே தெரிந்து இருக்கிறது.!” என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அவரது கருத்துக்கு பதிலடியாக உதயநிதி ஸ்டாலின் “நான் எப்பவுமே களத்துல தான் இருக்கேன் வேலுமணிண்ணே. உங்கள் ஊழல் குளம் கோவையில இருப்பதற்கான ஆதாரத்தை போட்டோவா போட்டிருக்கேன். தமிழ்நாட்டில் கோவையை ஊழலுக்கே முன்னுதாரணமாக கொண்டு வந்தவர் நீங்கள்! விரைவில், நீதிமன்றத்திலும் – மக்கள் மன்றத்திலும் பதில் சொல்லத் தயாராக இருங்கள்!” என்று தெரிவித்திருந்தார். மேலும், ஆதாரத்தையும் புகைப்படத்துடன் வெளியிட்டார்.

உதயநிதி ஸ்டாலினின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் வகையில், “என் வேலையைப் பற்றிய ஆரோக்கியமான விமர்சனங்களை எப்போதும் வரவேற்கிறேன். ஆனால் நீங்கள் பேசியிருப்பதும், பதிவிட்டிருப்பதும் அப்பட்டமான பொய்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Leave a Reply