கைதான சில மணி நேரங்களில் நக்கீரன் கோபால் விடுதலை
சட்டப்பிரிவு 124-ன் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்ட நக்கீரம் கோபாலை விடுதலை செய்ய எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நக்கீரன் கோபால் மீதான வழக்கு செல்லாது என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நக்கீரன் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு அவர் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124 (அரசு உயர் பதவியில் இருப்பவர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் எழுதி கருத்துக்களை பரப்புதல்) சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் ஆஜர் செய்யப்பட்டார்.
இவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து அரசு தரப்பும், நக்கீரன் கோபால் தரப்பும் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை எனவும், 124 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது செல்லாது எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தார். இதனால் நக்கீரன் கோபால் கைதான சில மணி நேரங்களில் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நக்கீரன் கோபால், தனக்கு ஆதரவாகவும், கருத்து சுதந்திரத்துக்கு எதிரான இந்த போரில் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்து என்.ராம் அவர்களுக்கும், தனக்காக கைதாகி உள்ள வைகோவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.