மத்திய அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு: அமைச்சர் ஸ்மிரிதி இரானி கருத்து
மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் கூறிய பாலியல் புகார் குறித்து அமைச்சர் எம்.ஜே.அக்பர் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு அமைதியாக இருப்பது ஏன்? என்றும், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர்களாக இருக்கும் சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன் ஆகியோர் மத்திய அமைச்சருக்கு எதிரான விவகாரம் குறித்து பதிலளிக்க மறுத்துவிட்டனர். ஆனால் எந்த விஷயத்திற்கும் வெளிப்படையாக கருத்தை பதிவு செய்து வரும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, பத்திரிக்கையாளர்கள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர்தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
’இவ்விவகாரம் தொடர்பாக அவர்தான் பதிலளிக்க வேண்டும். பெண் பத்திரிக்கையாளர்களுடன் உடன் நிற்கும் மீடியாக்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டியது அவரை சார்ந்தது. ஏனென்றால் சம்பவம் நடைபெற்ற போது நான் அங்கு கிடையாது,’ என்று கூறியுள்ளார்