சோபியாவை மிரட்டியதாக குற்றச்சாட்டு: தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
கனடா நாட்டில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவி சோபியாவை மிரட்டியதாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமானத்தில் பயணித்தபோது அதே விமானத்தில் இருந்த சோபியா என்ற மாணவி, ‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என கோஷம் போட்டார்.
இதனையடுத்து விமானம் தூத்துக்குடி விமானநிலையத்தில் தரையிறங்கியதும், தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் சோபியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழிசை சௌந்தர்ராஜன் அளித்தப் புகாரின் பேரில், சோபியா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் அதே நேரத்தில் தன்னை தமிழிசை மிரட்டியதாக சோபியா கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து சோபியா தந்தை பதிவு செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘ சோபியாவை மிரட்டிய புகாரில் தமிழிசை சௌந்தர்ராஜன் மீது வழக்குப்பதிவு செய்து, நவம்பர் 20 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்துள்ளது.