கஜா புயல் பாதிப்பை நேரில் ஆய்வு செய்த கமல்ஹாசன்
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட கஜா புயல் பாதிப்பை நேரில் பார்வையிட இன்று காலை கமல்ஹாசன் திருச்சி சென்றார். பின்னர் அங்கிருந்து தஞ்சை சென்ற கமல்ஹாசன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜா புயல் இந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சேதமும் இவ்வளவு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கவில்லை. முதலில் சேதம் குறித்து சரியான தகவல் தெரியவில்லை. கடந்த 6 நாட்களாக எங்கள் மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் கிராமங்களில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் நிவாரண பணிகளை தொடர்ந்தபோது தான் சேதம் குறித்த முழுமையான தகவல் தெரிய வந்தது. அதிகாரிகள் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளதை விட அதிக சேதம் ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் இதுவரை ரூ.60 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர். இன்று மேலும் 70 வாகனங்களில் நிவாரண பொருட்களை கொண்டு செல்ல உள்ளோம். அவர்களுடன் நானும் செல்ல உள்ளேன்.
ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை பொருட்களாக வழங்கி வருகிறோம். இன்னும் பல மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன. அவை பணமாக இல்லாமல் பொருட்களாக பெற்று வருகிறோம். அதையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து வழங்குவோம்.