புல்லே முளைக்கல, தாமரை எப்படி மலரும்? மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட முளைக்க வழியில்லாத நிலை இருக்கும்போது தாமரை எப்படி மலரும் என்று பாஜகவை கிண்டல் செய்து திமுக தலைவர் ஸ்டாலின் திருச்சியில் நடந்த திமுக கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.
மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தனது தோழமை கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் திருச்சியில் இன்று நடைபெற்று வரும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி இருக்கிறார்கள் .
இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘காவிரி கர்நாடகாவில் உற்பத்தியானாலும், அது தமிழகத்தில்தான் அதிகம் பாய்கிறது. இது பெரிய வரம். ஆனால் இதை தடுக்க மத்திய அரசுடன் சேர்ந்து கர்நாடக அரசு சதி செய்து வருகிறது. மேகதாது அணைக்கட்டினால் தமிழகத்திற்கு காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் வராது.
மேகதாது விவகாரத்தில் தேர்தலுக்காகவோ, அரசியலுக்காகவோ போராடவில்லை. காவிரியை தடுக்கும் பணிகளில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு நிச்சயம் தண்ணீர் வராது. தமிழக விவசாயமே நாசம் அடையும்.
மேகதாது பிரச்சனைக்கு முழு காரணம் தமிழக அரசும், மத்திய அரசும் தான். கஜா நிவாரணம் தராத மத்திய அரசுக்கு தமிழக மக்கள் ஏன் வரி செலுத்த வேண்டும். தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட வளராத நிலையில், தாமரை எப்படி மலரும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.