கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
தொழிற்கல்வி படிக்கும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை பெற ஜனவரி 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தேசிய ஆசிரியர் சேமநல நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதற்கு தொழிற்கல்வி பாடப்பிரிவு தேர்வு செய்திருப்பதோடு அரியர் இல்லாமல் இருப்பது அவசியம். ஆண்டு வருமானம், ஏழு லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாதவர்கள், இந்தத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் ஜன. 31-ஆம் தேதிக்குள், அனைத்து ஆவணங்களும் இணைத்து விண்ணப்பிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், குறைந்தபட்சம், 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம். ஆண்டு வருமான சான்றிதழ், மாத ஊதிய சான்றிதழ் இணைத்து, தமிழில் தெளிவாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பள்ளிக்கல்வி இயக்குநரகத்துக்கு நேரிலோ, பதிவு அஞ்சலாகவோ விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டம், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் விபத்தில் இறந்த ஆசிரியர்களின் குழந்தைகளுக்கும் பொருந்தும். ஆவணங்கள் முறையாக இல்லாவிட்டால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அதில் கூறியுள்ளார்.